பேக்கரியில் வாங்கிய 'கேக்'கில் புழு
மயிலாடுதுறையில் பேக்கரியில் வாங்கிய ‘கேக்’கில் புழு இருந்ததால் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா நாங்கூர் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா. இவர் தனது மகன் பிறந்த நாளுக்கா மயிலாடுதுறையில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அன்று மாலை பிறந்தநாளுக்கு வந்தவர்களுக்கு கேக்கை வெட்டி கொடுத்தபோது அதில் புழு நெளிந்து ஓடியது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மாவட்டம் முழுவதும் வைரலாக பரவியது.இதனை தொடர்ந்து ஷோபனா நேற்று மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் மனு அளித்தார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் பேக்கரியில் ஆய்வு செய்தார். அப்போது பிரட், குளிர்பானங்கள், கேக் வகைகளில் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த திண்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறையினர் கொட்டி அழித்தனர். தொடர்ந்து தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டதன் பேரில் அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய உணவுபாதுகாப்புத்துறை அலுவலர் பரிந்துரை கடிதம் வழங்க உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.