திருவாலங்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு - காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் சோகம்
திருவாலங்காடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் யுவசங்கர் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவீனா (21) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் யுவசங்கரும், நவீனாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இணையத்தளத்தில் வெளியான வேலைவாய்ப்பு மூலம் திருவாலங்காடு ஒன்றியம் பரேஸ்புரம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான முயல் பண்ணையில் கடந்த மாதம் 20-ந் தேதி வேலைக்கு சேர்ந்தனர். கணவன்- மனைவி இருவரும் முயல் பண்ணையில் தங்கி பராமரிப்பு பணி செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சொந்த ஊருக்கு செல்வதற்காக யுவசங்கர் தனது மனைவி நவீனாவுடன் வீட்டின் பின்புறமாக பஸ் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது முயல்பண்ணை அருகே அமைந்துள்ள தரை கிணற்றில் கால் தவறி யுவசங்கர் விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி நவீனா அழுது கொண்டு முயல் பண்ணை உரிமையாளர் கோபியிடம் தெரிவித்தார். இதுகுறித்து கோபி திருத்தணி தீயணைப்புத் துறையினர் மற்றும் திருவாலங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் யுவசங்கர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.