தூத்துக்குடியில் புதிதாக திறக்கப்பட்டஅண்ணா பஸ்நிலையத்தில் போக்குவரத்து தொடங்கியது


தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட அண்ணா பஸ்நிலையத்தில் போக்குவரத்து தொடங்கியது

தூத்துக்குடி

தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையத்தில் புதன்கிழமை முதல் போக்குவரத்து தொடங்கியது. பொதுமக்கள் நிம்மதி மகிழ்ச்சியுடன் பஸ்களில் ஏறி பயணித்தனர்.

அண்ணா பஸ்நிலையம்

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்து உள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.58 கோடியே 67 லட்சம் செலவில் முழுமையாக சீரமைக்கப்பட்டு, புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிலையம் கடந்த 8-ந் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதன்கிழமை முதல் பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் நேற்று அதிகாலை முதலே அனைத்து பஸ்களும் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பஸ் நிலையத்துக்குள் வந்தன. பின்னர் அந்தந்த ஊர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து பஸ்கள் புறப்பட்டு சென்றன.

எந்தவித குளறுபடிகளும், நெருக்கடியும் இல்லாமல் பஸ்கள், பஸ் நிலையத்துக்கு வந்து சென்றன. பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கான இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மகிழ்ச்சி

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த தற்காலிக பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. மேலும், லேசான மழை பெய்தாலே பஸ் நிலையம் சகதிக்காடாக மாறிவிடும். இதனால் பயணிகள் மட்டுமன்றி பஸ்களின் ஓட்டுநர், நடத்துநர்களும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அனைத்து வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள், ஓட்டுநர், நடத்துநர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

மினிபஸ்கள்

மேலும் பஸ்களின் இயக்கத்தை மாநகராட்சி மற்றும் போக்குவரத்துக்கழக அலுவலர்கள் கண்காணித்து, ஓட்டுநர், நடத்துநர்கள் மற்றும் பயணிகளுக்கு வழிகாட்டினர். மினிபஸ்களை தொடர்ந்து தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டன.

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று காலை பஸ் நிலையத்துக்கு சென்று பஸ்கள் அந்தந்த இடத்தில் முறையாக நிறுத்தப்படுகிறதா?, பயணிகள் வந்து செல்வதில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story