புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு


புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2023 7:37 AM IST (Updated: 31 Dec 2023 7:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா கடற்கரையில் இன்று இரவு 8 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இன்று இரவு 8 மணியில் இருந்து புத்தாண்டு தினமான நாளை காலை 6 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். இந்த ஆண்டும் அதேபோன்று பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு தற்காலிக புற காவல் நிலையங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் இன்று இரவு ஈடுபட உள்ளனர்.

புத்தாண்டு தினத்தில் வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவார்கள். அதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 500 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் போலீஸ் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து அமைதியான முறையில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story