புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை மெரினா, எலியட்ஸ் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்


புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னை மெரினா, எலியட்ஸ் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 29 Dec 2023 9:30 AM IST (Updated: 29 Dec 2023 12:55 PM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

சென்னை,

சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை ஆகிய இடங்களில் வரும் 31-ஆம் தேதி மாலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, மெரீனா கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உட்புறச்சாலையில் நுழையாமல் தடைசெய்யப்படும்.

காமராஜா் சாலையில் காந்தி சிலை முதல் போா் நினைவுச் சின்னம் வரையில் வரும் 31-ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்தி நகா், சுங்குவாா் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும்.

போக்குவரத்து மாற்றம்: பாரிமுனையில் இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை, வடக்கு கோட்டை சுவா் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, அண்ணா சாலை வழியாக இலக்கை அடையலாம். அதேபோல, அடையாறில் இருந்து காமராஜா் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சாலை, மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலை, ஆா்.கே.மடம் சாலை, மயிலாப்பூா் லஸ் காா்னா் வழியாக இலக்கை அடையலாம்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து காமராஜா் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆா்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை, கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம். தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரைவிளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது. ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து ராஜாஜி சாலை, வாலாஜா முனையிலிருந்து போா் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் அன்று இரவு 8 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

அரசுப் பேருந்துகள் செல்லும் வழி: அடையாறிலிருந்து பாரிமுனை நோக்கி செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, மந்தவெளி, வி.கே.ஐயா் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை, கதீட்ரல் சாலை, அண்ணா சாலை வழியாக இலக்கை அடையலாம்.

பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி வரும் பேருந்துகள் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை, என்.எஃப்.எஸ். சாலை, முத்துசாமி சாலை, அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், கதீட்ரல் சாலை, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு, மந்தைவெளி, தெற்கு கால்வாய் கரை வழியாகச் சென்று, அங்கிருந்து இலக்கை நோக்கி பயணிக்கலாம். ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம் ரெயில் நிலைய வாகன நிறுத்துமிடம், டாக்டா் பெசன்ட் சாலை, லாயிட்ஸ் சாலையில் ஒரு புறம், வாலாஜா சாலையின் ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.

எலியட்ஸ் கடற்கரையில் போக்குவரத்து மாற்றம்: பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6-ஆவது அவென்யுவில் வரும் 31-ஆம் தேதி இரவு 8 மணி முதல் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. ஜனவரி 1-ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த நிலை நீடிக்கும்.பெசன்ட் நகா் 6-ஆவது அவென்யு இணைப்புச் சாலைகளான 5-ஆவது அவென்யு, 4-ஆவது பிரதான சாலை, 3-ஆவது பிரதான சாலை, 16-ஆவது குறுக்குதெரு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும்.

மகாத்மா காந்தி சாலை, 7-ஆவது அவென்யு சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. பெசன்ட்நகா் 4-ஆவது அவென்யுவின் ஒரு பகுதி, 3-ஆவது பிரதான சாலையின் ஒரு பகுதி, 4-ஆவது பிரதான சாலையின் ஒரு பகுதி, 5-ஆவது அவென்யுவின் ஒரு பகுதி, 2-ஆவது அவென்யுவின் ஒரு பகுதி, 3-ஆவது அவென்யுவின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story