பாம்பன் ரோடு பாலத்தில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள்
பாதுகாப்பு காரணங்களுக்காக கடலில் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலத்தில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன
ராமேசுவரம்,
பாதுகாப்பு காரணங்களுக்காக கடலில் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலத்தில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
பாம்பன் ரோடு பாலம்
மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அது போல் கடந்த 35 ஆண்டுகளை கடந்து ரோடு பாலத்தில் சாலை போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் கார், வேன், பஸ், ஆட்டோ உள்ளிட்ட பல வாகனங்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வருகின்றன. இந்த வாகனங்கள் அனைத்தும் பாம்பன் ரோடு பாலம் வழியாக வந்து செல்கின்றன.
அதுபோல் பாம்பன் ரோடு பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இவ்வாறு விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் அதிவேகமாக வரும் போது சுற்றுலா பயணிகள் மீது மோதி விட்டோ அல்லது வாகனங்களின் மீது மோதி விட்டோ நிற்காமல் சென்று விடுகின்றன.
கண்காணிப்பு கேமரா
இந்த நிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் விபத்துகளை ஏற்படுத்தி நிற்காமல் செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்க வசதியாகவும் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையிலும் மர்ம நபர்களின் நடமாட்டத்தை தடுத்து கண்காணிக்கும் வகையிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் பாம்பன் ரோடு பாலத்தில் புதிதாக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. பாம்பன் ரோடு பாலத்தின் 2 நுழைவுப் பகுதி, மையப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் 10 கண்காணிப்பு கேமராக்கள் மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதுபோல் இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் வகையில் பாம்பன் போலீஸ் நிலையத்தில் எல்.இ.டி. டி.வி. ஒன்றும் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.