சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு


சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு
x
தினத்தந்தி 3 Oct 2023 4:15 AM IST (Updated: 3 Oct 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் பஸ் விபத்து எதிரொலியாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர் பஸ் விபத்து எதிரொலியாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

போக்குவரத்து விதிமுறைகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பஸ் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். இதன் எதிரொலியாக நீலகிரிக்கு சுற்றுலா வரும் வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் 14 கொண்டை ஊசி வளைவுகளில், 2 தானியங்கி ஒலிபெருக்கி வேகக்கட்டுப்பாடு கருவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொண்டை ஊசி வளைவுகளில் அறிவிப்பு, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியும்படி அனைத்து கொண்டை ஊசி வளைவுகளிலும் குவி கண்ணாடி, திசை காட்டும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை பலகை

விபத்து நடந்த இடத்தில் ஆபத்தான வளைவுகள், மெதுவாக செல்லவும் என்ற எச்சரிக்கை பலகை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டு உள்ளது. காவல்துறை சார்பில் ஆங்காங்கே வாகன தணிக்கை செய்யப்பட்டு, வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை மெதுவாக இயக்கும்படி டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. விதிமீறும் வாகன டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

அனைத்து கொண்டை ஊசி வளைவுகளிலும் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு வெள்ளை, கருப்பு நிற வண்ணம் பூசப்பட்டு உள்ளது. சாலைகளில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மழைக்காலங்களில் சாலைகளில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புச்சுவர்கள், கருங்கல் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. சாலை விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வாகனத்தின் தன்மை

மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா வரும் வெளியூர் வாகன டிரைவர்கள் மிகவும் அனுபவம் பெற்ற மற்றும் மலைப்பிரதேசங்களில் வாகனம் இயக்கும் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். சுற்றுலா வரும் வாகனங்களை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். மலைப்பிரதேசங்களில் வாகனங்களை இயக்குவதற்கு முன்பு வாகனத்தின் தன்மையை கண்டிப்பாக சோதனை செய்திருக்க வேண்டும். சாலை விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

மலைப்பாதையில் 35 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்பதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அதிவேகமாகவோ அல்லது ஒரு வாகனத்தை முந்திக்கொண்டு செல்லக்கூடாது. அதிக நாட்கள் சுற்றுலா வருபவர்கள் தேவைக்கேற்ப கூடுதல் டிரைவர்களை அழைத்து வர வேண்டும். டிரைவர்களுக்கு சரியான ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். வாகன டிரைவர்களுக்கு சரியான ஓய்வு கொடுக்காமல் வாகனத்தை இயக்கி, அதனால் விபத்துகள் ஏற்பட்டால் அந்த வாகனத்தின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பழுதை சரிசெய்ய வேண்டும்

வாகனத்தை இயக்கும்போது எப்போது பழுது ஏற்பட்டாலும், உடனடியாக அதை சரிசெய்ய வேண்டும். பழுதுடன் வாகனத்தை இயக்கக்கூடாது. மலைப்பகுதியில் வாகனத்தை இயக்கும்போது குறிப்பாக கீழ்நோக்கி இறங்கும் போது, அடிக்கடி பிரேக்கை அழுத்தாமலும், பிரேக் டிரம்மை சூடாக்காமலும் 2-வது கியரில் வாகனத்தை இயக்க வேண்டும். சுற்றுலா வரும் வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சுற்றுலா பயணிகளை ஏற்றி வரக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story