புதிய ரேஷன் கடை திறப்பு
விளாத்திகுளத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் சாலையம் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. விளாத்திகுளம் நகரச் செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சுந்தரவேல், கவுன்சிலர் சரண்யா ஸ்ரீதர், தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் கடை அருகே மரக்கன்றுகளை நட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் காசி விஸ்வநாதன், வார்டு செயலாளர் ஸ்டாலின் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள அயன் விருசம்பட்டி கிராமத்தில் அருள்மிகு எல்லம்மாள் தேவி கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது. இதை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம் அருகே உள்ள கீழ அருணாசலபுரம் ஊராட்சி நடுக்காட்டூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் தலைமை தாங்கினார். புதூர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கண்ணன் வரவேற்று பேசினார். புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து கீழ அருணாசலபுரம் ஊராட்சி முத்துப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிமைய கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் புதூர் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் வெற்றிவேல், கிளைச் செயலாளர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.