கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய ரெயில் நிலையம் - டெண்டர் கோரிய தெற்கு ரெயில்வே


கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய ரெயில் நிலையம் - டெண்டர் கோரிய தெற்கு ரெயில்வே
x

கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரெயில் நிலையம் அமைக்க தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது.

சென்னை

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 80 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பஸ் நிலையத்தின் கட்டுமான பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், பயணிகளின் வசதிக்காக, தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புறநகர் ரெயில் நிலையம் அமைக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மேலும், தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் பஸ் நிலையத்திற்கு எதிரே ரெயில் நிலையம் அமைக்க வேண்டுமெனவும் தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கு தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது. இங்கு புதிய ரெயில் நிலையம், நடைமேடைகள் தொடர்பாக நிரந்தர பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த ரெயில் நிலையம் புறநகர் மின்சார ரெயில்கள் நின்றுசெல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. புதிய ரெயில் நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்கள் கிளாம்பாக்கத்தில் நின்று செல்லும். புதிய ரெயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடிக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.


Next Story