கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய நடவடிக்கை


கோதுமை விலை  உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய நடவடிக்கை
x

கட்டுப்பாடுகளையும் மீறி பதுக்கல் நடைபெறுவதையும், கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது என வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

விருதுநகர்


கட்டுப்பாடுகளையும் மீறி பதுக்கல் நடைபெறுவதையும், கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது என வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

கோதுமைக்கு கட்டுப்பாடு

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

கோதுமை விலையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சில்லறை வணிகர்கள் 10 டன் அளவிற்கு கோதுமையையும், மொத்த வியாபாரிகள் 3 ஆயிரம் டன் அளவிற்கு கோதுமையையும், கோதுமை மாவு அரவை ஆலைகள் தங்கள் வருடாந்திர தேவைக்கான அளவில் 75 சதவீதம் அல்லது ஜூன் 2023 முதல் மார்ச் 2024 வரை மாதாந்திர தேவைக்கான அளவினையும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஆனால் இந்த கட்டுப்பாடுகளையும் மீறி கோதுமையின் விலை உயர்ந்து வருகிறது. மத்திய அரசின் இந்திய உணவு கழகம் வாரந்தோறும் நடத்தும் கோதுமை ஏலத்தில் ஒவ்வொரு வாரமும் விலை உயர்ந்து வரும் நிலை உள்ளது.

40 மில்லியன் டன் பதுக்கல்

தேசிய அளவில் சராசரியாக கடந்த ஏப்ரல் மாதம் கோதுமையின் விலை கிலோ ரூ.31.32 ஆகவும், மே மாதம் ரூ.31.27 ஆகவும் ஜூன் மாதம் ரூ.31.69 ஆகும். ஜூலை மாதம் ரூ. 31.96 ஆகவும், ஆகஸ்டு முதல் வாரத்தில் ரூ.32.13 ஆகவும் விலை உயர்ந்து வந்துள்ளது. இதேபோன்று கோதுமை மாவு கிலோ ஏப்ரல் மாதம் ரூ. 36.55 ஆகவும் மே மாதம் ரூ.36.42 ஆகவும், ஜூன் மாதம் ரூ. 36.95 ஆகவும், ஜூலை மாதம் ரூ.37.18 ஆகவும், ஆகஸ்டு முதல் வாரத்தில் ரூ.37.27 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசின் இந்த கட்டுப்பாட்டுகளையும் மீறி நாடு முழுவதும் 40 மில்லியன் டன் கோதுமை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு புதிய நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விலை குறைய வாய்ப்பு

அந்த வகையில் கோதுமையின் இறக்குமதி வரி 44 சதவீதமாக உள்ள நிலையில் அதனை முற்றிலுமாக குறைக்கவும் மொத்த விற்பனையாளர்களின் கோதுமை இருப்பிற்கான அளவை 3 ஆயிரம் டன்னிலிருந்து இருந்து 2 ஆயிரம் டன்னாக குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த நடவடிக்கைகள் எப்போது அமலுக்கு வரும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் மத்திய அரசு ரஷிய அரசிடமிருந்து நேரடியாக கோதுமை கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் மத்திய அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளால் கோதுமை விலை வருகின்ற நாட்களில் தேசிய அளவில் குறைய வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story