புதிய கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்
தரம் உயர்த்தப்பட்ட பழனி அரசு மருத்துவமனையில் புதிய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சுகாதார திட்ட இயக்குனர் உமா தெரிவித்தார்.
பழனி அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
இந்நிலையில் தமிழக சுகாதார திட்ட இயக்குனர் உமா, பழனி அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தார். பின்னர் மருத்துவமனை பகுதியில் உள்ள பழைய கட்டிடங்கள், புதிய கட்டிடங்கள் அமையவுள்ள பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ேமலும் சுகாதாரத்துறை, மருத்துவமனை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தரம் உயர்த்தப்பட்ட பழனி அரசு மருத்துவமனையில் மக்களுக்கு தேவையான புதிய சிகிச்சை மையங்கள், கூடுதல் கட்டிடங்கள் விரைவில் கட்டப்பட உள்ளன.
இதுமட்டுமின்றி சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றவும், பயன்படாமல் உள்ள கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. புதிதாக கட்டப்பட்ட கண் சிகிச்சை பிரிவு ஜூலை மாதம் முதல் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது என்றார்.