ஆலந்துறை அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்


ஆலந்துறை அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
x

ஆலந்துறை அம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் அய்யனார், ஆலந்துறை அம்மன், பெரியசாமி, செங்காமுனியார், சங்கிலி கருப்பன், மருதையான் ஆகிய சுவாமிகளுக்கும், சப்த கன்னிமார்களுக்கும் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் இருந்த தேர் பழுதடைந்ததால் புதிய தேர் செய்யப்பட்டது. அந்த புதிய தேரின் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் கோவிலில் வாஸ்து பூஜை, சாந்தி பூஜை, கணபதி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய தேர் புனிதப்படுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டது. காலை 10.15 மணிக்கு மேல் புதிய தேரின் வெள்ளோட்டம் தொடங்கியது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து தேரினை வடம் பிடித்து இழுத்தனர். செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க தேரோடும் வீதிகளின் வழியாக தேர் வலம் வந்தது. மேலும் பக்தர்கள் மலர் தூவி தேரை வரவேற்றனர். தேரின் முன்பு சுவாமி வேடமிட்டு ஆடிய கலைஞர்கள் பக்தர்களை பக்தி பரவசப்படுத்தினர். பின்னர் தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துறைமங்கலம் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story