மாங்காட்டில் ரூ.6.40 கோடி செலவில் புதிய பஸ் நிலையம்: கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
மாங்காட்டில் ரூ.6.40 கோடி செலவில் புதிய பஸ் நிலைய பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காட்டில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குன்றத்தூர் - குமணன்சாவடி சாலை, மாங்காடு பகுதியில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.6 கோடியே 40 லட்சம் செலவில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தற்போது தொடங்க உள்ளது.
இந்த புதிய பஸ் நிலையத்தில் 11 அரசு பஸ்கள் நிற்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரி செந்தில்குமார் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்து புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம், அதன் வரைபடங்கள் போன்றவற்றை பார்வையிட்டனர். அது மட்டுமின்றி விரைந்து பணிகளை தொடங்கி முடிப்பதற்கும் அறிவுறுத்திவிட்டு சென்றனர். அவருடன் மாங்காடு நகர மன்ற தலைவர் சுமதி முருகன், துணைத்தலைவர் ஜபருல்லா, நகராட்சி கமிஷனர் குமாரி, நகராட்சி பொறியாளர் செந்தில்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியில் ஒரத்தூர் கிளை ஆற்றின் குறுக்கே பருவ மழையின் போது வெள்ளத்தை சேமிக்கவும் வெள்ள அபாயத்தை குறைக்கவும் ரூ.60 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி முடிவடையாமல் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி செந்தில்குமார், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் நீர்த்தேக்க பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதேபோல் வரதராஜபுரம் ஊராட்சியில் குடியிருப்பு மற்றும் அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் ராயப்பா நகரில் கட்டப்பட்டு வரும் கீழ்மட்ட கால்வாய் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆய்வு செய்தனர்.