கண் நோய் சிகிச்சைக்கான புதிய கட்டிட பணி தீவிரம்
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கண் நோய் சிகிச்சைக்கு புதிய கட்டிட கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை
அறந்தாங்கியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் பொது மருத்துவமும், அவசர சிகிச்சை, புறநோயாளிகள் சிகிச்சை பகுதி, குழந்தைகளுக்கான சிகிச்சை, சித்த மருத்துவம், இயன்முறை உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இந்த மருத்துவமனை பயனுள்ளதாக உள்ளது. இந்த அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். இதற்காக ரூ.58 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய கட்டிடம்
இந்த நிலையில் மருத்துவமனையில் கண் நோயாளிகள் சிகிச்சைக்கு தனியாக கட்டிட வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் மேல் தளத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்படுகிறது. இப்பணி தீவிரமாக நடக்கிறது. இதில் கண் நோய் அறுவை சிகிச்சை அரங்கம் வர உள்ளது. இதன் மூலம் கண் நோய் தொடர்பாக மேல் சிகிச்சைக்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக இங்கேயே சிகிச்சை பெற முடியும் என்று மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர். இதற்கிடையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின், நோயாளிகளின் சிகிச்சைக்காக கூடுதல் கட்டிடங்கள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.