ரூ.3 கோடியே 45 லட்சத்தில் புதிய கட்டிடம்.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 45 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
ஆத்தூர் அருகே கோழிப்பண்ணை பிரிவு பகுதியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கான புதிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏழுமலையான், ஆத்தூர் ஒன்றியக்குழு துணை தலைவர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்து பேசுகையில், தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் ஆத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது ஆத்தூர் ஒன்றிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் ரூ.3 கோடியே 45 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது. கன்னிவாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மிகப்பெரிய அளவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் நிலக்கோட்டை அரசு பெண்கள் கலைக்கல்லூரி கொண்டுவரப்பட்டது என்றார். நிகழ்ச்சியில், ஆத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ராமன், முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், இளைஞரணி மேற்கு ஒன்றிய அமைப்பாளர் மணிகண்டன், உதவி பொறியாளர்கள் முருகபாண்டியன், ராமநாதன், சீவல்சரகு ஊராட்சி தலைவர் ராணி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.