புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு


புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு
x

திருவாரூர் மாவட்டத்தில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு வழிகாட்டும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வை, 390 மையங்களில் 7,939 பேர் எழுதினர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டத்தில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு வழிகாட்டும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வை, 390 மையங்களில் 7,939 பேர் எழுதினர்.

எழுத்தறிவு திட்டம்

தமிழகத்தில் எழுத படிக்க தெரியாதவர்கள் அனைவரும் எழுத்தறிவு பெறும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு இப்பயிற்சி வழங்கப்படும். அனுபவம்மிக்க தன்னார்வலர்களை கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது 80.33 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். மத்திய அரசின் உதவியுடன் செயல்படும் இத்திட்டத்தில் முதல் கட்டமாக நாடு முழுவதும் 15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

5 கோடி பேருக்கு கல்விகற்பிக்க இலக்கு

2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்க பட்டிருக்கிறது. வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை மத்திய அரசு எல்லா மாநில அரசுகளுடன் இணைத்து அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் இப்பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தில் கல்வி அறிவு மற்றும் எண்ணியல் அறிவு மட்டுமின்றி 21-ம் நூற்றாண்டில் ஓர் குடிமகனுக்கு தேவையான முக்கியமான வாழ்க்கை திறன்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு அடங்கிய வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 140 பக்கங்கள் கொண்ட பயிற்சி நூலை தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது.

7,939 பேர் தேர்வு எழுதினர்

இந்த 6 மாத கால பயிற்சியில் களப்பயணமாக வங்கி, அஞ்சலகம், ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களுக்கு நேரில் அழைத்து செல்லப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 390 மையங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் தன்னார்வலர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் உதவியுடன் இவர்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 7ஆயிரத்து 939 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தற்போது முதற்கட்ட பயிற்சிகள் முடிந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த பயிற்சி தேர்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயா, மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மையங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.


Related Tags :
Next Story