நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம். இவர், நிலம் தொடர்பாக சிலர் மீது நெல்லை மாவட்ட போலீசில் புகார் செய்தார். புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், தமிழ்நாடு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரை விசாரித்த ஆணையம், பரமானந்தம் புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. ஆனால் போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்கவில்லை.
அபராதம் விதிப்பு
அதையடுத்து அறிக்கை தாக்கல் செய்ய பலமுறை அவருக்கு ஆணையம் வாய்ப்பு அளித்தது. அப்போதும் அவர் அறிக்கை அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, பதில் அளிக்காததற்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என்று கேள்வி கேட்டு, அதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு ஆணையம் உத்தரவிட்டது
இறுதியாக இந்த வழக்கு ஆணையத்தில் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் சூப்பிரண்டு மாரிராஜன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அதையடுத்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ப.சரவணனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆணையம், அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தது.
தகுதிக்கு குறைவானதாக...
மேலும், எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவு தம்மை கட்டுப்படுத்தாது என்றும், இந்த ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராவதை தம் தகுதிக்கு குறைவானது என்றும் போலீஸ் சூப்பிரண்டு கருதுகிறார். எனவே, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பிக்கப்படுகிறது என்று ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, நெல்லை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
சாதி மோதல்
அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் ராஜ் திலக் ஆஜராகி, 'சாதி மோதல் நடைபெறும் மாவட்டம் என்பதால், போலீஸ் சூப்பிரண்டால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. அதற்கு பதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகியும் அதை ஏற்காமல் ஆணையம் பிடிவாரண்டு உத்தரவை பிறப்பித்துள்ளது' என்று வாதிட்டார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.