நெல்லை டி.ஐ.ஜி. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
வாலிபர்களை போலீசார் பிடித்து சென்றதாக நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
வாலிபர்களை போலீசார் பிடித்து சென்றதாக நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
முற்றுகை
நெல்லை அருகே உள்ள விட்டிலாபுரம் வள்ளுவர் நகர் கிராம மக்கள் ஊர் பொறுப்பாளர் இசக்கி தலைமையில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழர் உரிமை மீட்பு களம் மாநில ஒருங்கிணைப்பாளர் லெனின், தென்மண்டல அமைப்பு செயலாளர் கணேச பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வேல்முருகன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாநகர செயலாளர் துரை பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்துவளவன், எம்.சி.சேகர், திராவிட தமிழர் கட்சி கதிரவன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுடலைராஜ், மக்கள் அதிகாரம் கிங்ஸ்டன், ஆதிதமிழர் பேரவை கலைக்கண்ணன் ஆகியோர் வந்தனர். அவர்கள் டி.ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் 10 பேரை அழைத்து சென்று டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாரிடம் மனு கொடுக்கச் செய்தனர்.
வாலிபர்களை பிடித்து சென்ற போலீசார்
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
எங்கள் ஊரில் அம்மன் கோவில் கொடை விழா கடந்த 3-ந் தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 4-ந்தேதி முத்தாலங்குறிச்சி ஆற்றுப்பாலத்தில் பால்குடம் எடுத்து வந்தோம். அப்போது வரும் பாதையில் சிலர் மதுபாட்டில்களை உடைத்து போட்டனர். மேலும் எங்களை வழிமறித்து பாட்டில், கற்களை வீசி தாக்கினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது கொடை விழா நல்லமுறையில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைதியாக வந்து விட்டோம்.
பின்னர் இரவில் ஒரு கும்பல் அரிவாளுடன் வந்து எங்கள் ஊர் இளைஞரை வெட்டினார்கள். அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 15 படித்த வாலிபர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் பிடித்து சென்று உள்ளனர். எனவே உடனடியாக அவர்களை விடுவிப்பதோடு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.