நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை


நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை
x

தங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 253 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் 46 சுய உதவிக்குழுக்கள் மூலமாக 753 தூய்மை பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களை திடீரென்று தனியார் நிறுவன ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து, அந்த நிறுவனம் மூலமாக தூய்மை பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நேற்று காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட சென்றனர். ஆனால், அவர்களை மாநகராட்சி அலுவலக வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை.

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

இதையடுத்து மாநகராட்சி அலுவலக நுழைவுவாயிலை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு நெல்லை மேற்கு போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என்றும், மீறி போராட்டத்தை தொடர்ந்து நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் போலீசார் எச்சரித்தனர். ஆனால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றினார்கள்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகி மோகன், மாவட்ட செயலாளர் முருகன் உள்பட அனைத்து தொழிலாளர்களையும் கைது செய்து வேன்களில் ஏற்ற முயன்றனர். அப்போது தூய்மை பணியாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சிலரை குண்டுகட்டாக தூக்கி சென்று வேன், பஸ்களில் ஏற்றினர்.

இதில் துணைத்தலைவர் நாராயணன், நிர்வாகிகள் சுரேஷ், பாக்கியலட்சுமி, கலா உள்ளிட்ட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மொத்தம் 126 பெண்கள் உள்பட 253 பேரை போலீசார் கைது செய்தனர்.

மண்டபத்தில் போராட்டம்

கைது செய்யப்பட்ட அனைவரையும் வேன், பஸ்களில் ஏற்றி, நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு வாகனங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் கீழே இறங்க மறுத்தனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு சென்ற தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேங்கிய குப்பைகள்

தூய்மை பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. தூய்மை பணியாளர்களின் கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் மாலையில் போராட்டங்கள் நடைபெற்றன.


Next Story