நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்-செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயல்வீரர்கள் கூட்டம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்தும், நாடாளுமன்ற தேர்தலில் கட்சியினர் சிறப்பாக பணியாற்றி வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்றும் பேசினார்.
சமத்துவ மக்கள் கட்சியினர் மாவட்ட பொதுச்செயலாளர் ஷிபா தலைமையில் அந்த கட்சியில் இருந்து விலகி தனுஷ்கோடி ஆதித்தன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
நெல்லை தொகுதி
கூட்டத்தில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்ற கருத்தை ஏக மனதாக அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். பருவமழை இல்லாமல் போனதால் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்த வேண்டும். கன்னடியன் கால்வாய், ராதாபுரம் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட பொருளாளர் பால்ராஜ், பொதுச்செயலாளர் சிவந்திபுரம் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.