நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் விசாரணை


நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் விசாரணை
x
தினத்தந்தி 7 May 2024 12:15 PM IST (Updated: 7 May 2024 12:26 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

நெல்லை,

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த 4-ம் தேதி அவரது வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் இறப்பதற்கு முன் தனது கைப்பட 2 கடிதங்களை எழுதி இருந்தார். அந்த கடிதங்களில் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை யாரெல்லாம் தனக்கு பணம் தர வேண்டும், மிரட்டல் விடுத்தவர்கள் என குறிப்பிட்டு இருந்தார்.

அந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடித்து வந்த நிலையில், விசாரணைக்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படையினர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் மரண வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ. உள்பட 30 பேருக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில், நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு தொடர்பாக நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இன்னும் பல வி.ஐ.பி.க்கள் இந்த விசாரணை வளையத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story