நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா; சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா


நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா; சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா
x

நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவின் 2-வது நாளான நேற்று சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவின் 2-வது நாளான நேற்று சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

வெள்ளி சப்பரத்தில் வீதி உலா

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

2-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. காலை 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து வெள்ளி சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

குடவரைவாயில் தீபாராதனை

இரவில் சுவாமி நெல்லையப்பர் கற்பகவிருட்ச வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். தொடா்ந்து சுவாமி- அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், அஸ்திரதேவருக்கு சோடச உபசார தீபாராதனையும், தொடா்ந்து யாகசாலை தீபாராதனையும் நடந்தது.

பின்னா் பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமி-அம்பாள் குடவரைவாயில் தீபாராதனையுடன் கோவிலின் வெளியே வந்தனா். நெல்லை சிவகணங்கள் பஞ்சவாத்திய இசையில் மங்கள வாத்தியங்கள் முழங்க 4 ரத வீதிகளிலும் வீதி உலா நடந்தது. அப்போது வேதபாராயணம் மற்றும் சிவனடியாா்களால் பன்னிரு திருமுறை பாராயணமும் பாடப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனா்.

நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழாவையொட்டி நந்தினியின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும், பிரியா பிரபுவின் பக்தி சொற்பொழிவும், பார்கவி சந்திரசேகரின் பக்தி இன்னிசையும், தாமிரசபை நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தாமோதர தீட்சிதரின் இன்னிசை சொற்பொழிவும் நடந்தது.

தேருக்கு சாரம் கட்டும் பணி

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தமிழகத்தில் உள்ள பெரிய தேர்களில் நெல்லையப்பர் தேர் 3-வது பெரிய தேர் என்ற பெருமை மிக்கதாகும். சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 480 டன் ஆகும். இந்த தேர் 85 அடி உயரமாகும்.

தேரோட்டத்தை முன்னிட்டு, தேரில் கூண்டுகளை பிரித்து சுத்தம் செய்யும் பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நேற்று தேரில் சாரம் கட்டி சீரமைக்கும் பணி நடைபெற்றது. சுவாமி-அம்பாள் தேர்களில் சாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து அந்த வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story