நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்; திரளான பக்தர்கள் தரிசனம்


நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்; திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 25 Jun 2023 1:26 AM IST (Updated: 25 Jun 2023 12:36 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவில்

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பெருந்திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி கடந்த 22-ந் தேதி தங்க பல்லக்கில் அஸ்திரதேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று முன்தினம் மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றிவர, ஆனி பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்டவர்களுக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கொடியேற்றம்

இந்த நிலையில் நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, காலை சந்தி பூஜைகள் நடந்தது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் ஆலய பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்றறு. காலை 7.30 மணிக்கு கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினார்கள். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'ெதன்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பெண்கள் குலவை இட்டனர்.

தீபாராதனை

இதைத்தொடா்ந்து கொடி மரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்களும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் வேதவிற்பன்னா்கள் நான்கு வேதம் கூற ஓதுவாமூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச தீபாராதனைகள் நடைபெற்றது.

இதில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வீதி உலா

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்து, ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெறும். மேலும் கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிக கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

8-ம் திருவிழாவான வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடராஜ பெருமான் வெள்ளை சாத்தியும், 8 மணிக்கு பச்சை சாத்தியும் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்கசப்பரத்தில் வீதி உலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலாவும், சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா வருதல் நடக்கின்றது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு பூஜையும், படப்பு தீபாராதனையும் நடக்கிறது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மேற்பார்வையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story