நெல்லை மேயர் விவகாரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு விசாரணை
நெல்லை மேயர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று விசாரணை நடத்தினார்.
நெல்லை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த பி.எம்.சரவணன் இருக்கிறார். இவர் மீது கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமீபத்தில் மேயரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி குறிப்பிட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.
நேற்று முன்தினம் மேயர் சரவணன் சென்னைக்கு சென்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், அதை மறுத்த அவர், தனது மகன் கல்லூரி படிப்பு விஷயமாகவும், சொந்த வேலைக்காகவும் சென்னை சென்றதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நெல்லை சங்கர்நகர் விருந்தினர் மாளிகையில் நெல்லை மாவட்ட பொறுப்பை கவனித்து வரும் அமைச்சர் தங்கம் தென்னரசு, கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, மேயர் சரவணன் மாநகராட்சியில் நல்ல நிர்வாகம் கொடுக்க வேண்டும். எனவே, கவுன்சிலர்கள் கொடுக்கின்ற கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களிடம், மாநகராட்சியில் சிறந்த நிர்வாகம் நடப்பதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.