மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்


மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
x

நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணைமேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னீர்பள்ளம் முல்லை நகர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் கிராமத்தில் இருந்து முன்னீர்பள்ளம் வரை புதிதாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்'' என்று கூறிஇருந்தனர்.

திருவண்ணநாதபுரத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், 'திருவண்ணநாதபுரம் சாலையோரத்தில் 40 ஆண்டுகளாக சாண உரங்களை கொட்டி சேமித்து வருகிறோம். விவசாய பயன்பாட்டிற்கு மாதம் ஒருமுறை எடுத்து வருகிறோம். தொடர்ந்து அந்த இடத்தை உரம் சேமிக்கும் இடமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டிருந்தனர்.

நெல்லை வியாபாரிகள் சங்கத்தினர், டவுன் மேலமாடவீதி சாலைைய சீரமைக்க வேண்டும் என்று கூறிஇருந்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நெல்லை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன் ஆகியோர் தலைமையில் பேரமைப்பினர் மற்றும் தச்சநல்லூர் நகர வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனுவில், 'தச்சநல்லூரில் உள்ள சங்கரன்கோவில் ரோட்டில் மினி மார்க்கெட் வளாகத்தை இடித்துவிட்டு புதிய பொலிவுடன் கட்டப்படவுள்ள வளாகத்தில் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி இல்லாமல் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்று கூறிஇருந்தனர்.

சேவியர் காலனியை சேர்ந்த பொதுமக்கள், 52-வது வார்டுக்கு உட்பட்ட எங்கள் பகுதியில் பல இடங்களில் கழிவு நீரை பக்கத்து மனைகளிலும், சாலைகளிலும் விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், வண்ணார்பேட்டை திருநீலகண்ட நயினார் தெருவைச் சேர்ந்த முருகானந்தம், வாறுகால் ஓடையை பழுது நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறிஇருந்தனர்.

தமிழ்த்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அளித்த மனுவில், 'மாநகர பகுதியில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள திட்ட பெயர்ப்பலகைகளில் தமிழில் வாசகம் இடம்பெற செய்ய வேண்டும்' என்று கூறிஇருந்தனர்.

கூட்டத்தில் துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன், பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து, தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் கிறிஸ்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story