நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் ; மேலும் ஒரு தனிப்படை அமைப்பு


நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம  மரணம் ; மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 16 May 2024 6:20 AM GMT (Updated: 16 May 2024 7:23 AM GMT)

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் மேலும் ஒரு தனிப்படை அமைத்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். இவர் கடந்த 4-ந்தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் சாவதற்கு முன் எழுதிய கடிதங்களும் வெளியாகின.இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 10 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், அவரின் வயிற்று பகுதியில் இரும்பு தகடும், கடப்பா கல்லும் கட்டப்பட்டு இருந்தது. எனவே அவரை மர்மநபர்கள் கொலை செய்து கடலில் வீச முயன்று இருக்கலாம் என்றும், அது ஏதோ காரணத்தால் அது முடியாமல் போகவே அவரை தோட்டத்தில் போட்டு தீ வைத்து எரித்ததாகவும் பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவரின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இதனால் சம்பவ இடங்களில் இருந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் புலனாய்வு துறை நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சேகரிக்கும் தடயங்களின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பல தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்கின் உறவினர்கள், அவரது ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், தோட்டத்தில் வேலை செய்தவர்கள், தூரத்து உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படையிலும், போலீசாரால் விசாரிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களையும் ஆராய்ந்து அதில் ஏதும் சந்தேகம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர். இதற்கிடையே, கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் வீட்டுக்கு தனிப்படை போலீசார் நேற்று மாலை 4 வாகனங்களில் சென்றனர். வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story