நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் சேவை தொடங்கியது


தினத்தந்தி 25 Sept 2023 3:49 AM IST (Updated: 25 Sept 2023 4:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை-சென்னை இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. அந்த ரெயிலில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் பயணம் செய்தனர்.

திருநெல்வேலி

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அதிநவீன சொகுசு ரெயிலான 'வந்தே பாரத்' ரெயிலை நெல்லை-சென்னை இடையே இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த சில நாட்களாக இருமார்க்கங்களிலும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

ரெயில் சேவை

இதையடுத்து நேற்று நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் விழா மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். சரியாக மதியம் 1 மணி அளவில் 'வந்தே பாரத்' ரெயில் நெல்லையில் இருந்து சென்னைக்கு தனது பயணத்தை தொடங்கியது. இந்த ரெயிலில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி எல்.முருகன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.

பொதுமக்கள் ஆரவாரம்

நெல்லை சந்திப்பில் நடைபெற்ற விழாவில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் பொருளாளர் அருண்குமார், தச்சநல்லூர் பகுதி செயலாளர் சுப்பிரமணியன், விவசாய அணி பொன்னையா பாண்டியன், பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் தயாசங்கர், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுதவிர 1 முதல் 3-வது பிளாட்பாரம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று 'வந்தே பாரத்' ரெயிலுக்கு கையசைத்து ஆரவாரத்துடன் சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.

இதேபோல் தச்சநல்லூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நின்று பொதுமக்கள் 'வந்தே பாரத்' ரெயிலை பார்த்து கையசைத்தனர். இதுதவிர கோவில்பட்டி உள்பட 12 இடங்களில் இந்த ரெயிலுக்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரெயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.


Next Story