நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் முன்பதிவு தொடங்கியது
நெல்லை-சென்னை ‘வந்தே பாரத்’ ரெயிலுக்கு முன்பதிவு நேற்று தொடங்கியது. 27-ந் தேதி முதல் நெல்லையில் இருந்து பயணிக்கலாம்.
ரெயில்வே துறையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, நவீன சொகுசு ரெயிலாக 'வந்தே பாரத்' ரெயில் உள்ளது. இதில் ஒரு ரெயில் நெல்லை-சென்னை இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது. இதற்காக இரு மார்க்கத்திலும் கடந்த சில நாட்களாக 'வந்தே பாரத்' ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கிறார்கள்.
'வந்தே பாரத்' ரெயில் மதியம் 12.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது. இன்று மட்டும் கட்டணமில்லாமல் சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து நெல்லைக்கு ஒரு சர்வீஸ் இயக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் இந்த ரெயில் சேவை கிடையாது.
வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) முதல் 'வந்தே பாரத்' ரெயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறுகிறது. இந்த ரெயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
'வந்தே பாரத்' ரெயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதில் செல்வதற்காக பயணிகள் வேகமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். வரும் பயண நாட்களில் சென்னையில் இருந்து நெல்லை வருவதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. குறிப்பாக நவம்பர் மாதம் 12-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாட்களில் டிக்கெட் முன்பதிவு காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விட்டது.
'வந்தே பாரத்' ரெயிலில் பயணிக்க நெல்லையில் இருந்து சென்னைக்கு உணவு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து சாதாரண இருக்கை கட்டணமாக ரூ.1,665, எக்ஸ்கியூட்டிவ் இருக்கை கட்டணமாக ரூ.3,055 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சென்னையில் இருந்து நெல்லைக்கு சாதாரண இருக்கை கட்டணம் ரூ.1,610 ஆகவும், எக்ஸ்கியூட்டிவ் இருக்கை கட்டணம் ரூ.3,005 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.