நெல்லை: ஊருக்குள் உலா வரும் கரடிகள்.. கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அனவன்குடியிருப்பு, பசுக்கிடைவிளை, கோட்டைவிளைபட்டி, சிவந்திபுரம் என சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது கரடிகள் ஜோடியாகவும், தனித்தனியாகவும் உலா வருகின்றன. பசுக்கிடைவிளை காமராஜர் நகர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோடியாக கரடிகள் உலா வந்தன. அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கருத்தையாபுரம் பகுதியிலும் 2 கரடிகள் ஜோடியாக உலா வந்தன. மேலும் வடக்கு அகஸ்தியர்புரம் பகுதியிலும் நேற்று காலையில் ஒற்றை கரடி உலா வந்தது. தற்போது இந்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். தகவல் அறிந்ததும் பாபநாசம் வனத்துறையினர் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து சுற்றித் திரியும் கரடிகளை அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே கூண்டு வைத்து உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.