நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம், மாவட்ட வன அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறு தானிய உற்பத்தி தொழில்நுட்ப கையேடு வெளியிடப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், "நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு சராசரி மழையுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 41.12 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன்கார் பருவத்தில் 870 எக்டேர் பரப்பில் மற்றும் கார் பருவத்தில் 3,131 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடியும், 259 எக்டேர் பரப்பில் சோளம், கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும், 1,620 எக்டேர் பரப்பில் பயறுவகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதால் விவசாயிகள் தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் சிறுதானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டு. நீர்நிலைகள் துார்வாரப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசுகையில், "நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 பருவமழைகளும் ஏமாற்றம் அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" என்றார்.
விலை நிர்ணயம்
அழகியபாண்டியபுரம் சீவலப்பேரியான் பேசுகையில், "நெல்லை மார்க்கெட்டில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறோம். சீனி அவரை 5 ரூபாய்க்கும், சாம்பார் வெள்ளரிக்காய் ஒரு ரூபாய் விலை வைக்கிறார்கள். இதனால் பல விவசாயிகள் காய்கறிகளை பறிக்காமல் போட்டுவிட்டனர். கடந்த முறை சிறு கிழங்கு அறுவடை செய்து இங்கு விலை கிடைக்காததால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே இதே சூழ்நிலை நீடித்தால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாது. எனவே விளை பொருட்களுக்கு தரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்றார்.
பணகுடி பகுதியில் மேய்ச்சல் நிலங்களை வளர்ப்பு பன்றிகள் அழித்து விடுகிறது என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கொடுமுடியாறு அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே விவசாய பணிகளுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயி மாடசாமி கோரிக்கை விடுத்தார்.