சிறப்பு முகாமில் அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆய்வு
சிறப்பு முகாமில் அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 19 பேர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றனர். ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 14 பேர் கடந்த 26-ந்தேதி நள்ளிரவு சிறப்பு முகாமுக்கு திரும்பினர். அதன்பின்னரும் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தையும் தொடர்ந்தனர்.
இதுபற்றி அறிந்த அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் நேற்று திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர், போராட்டம் நடத்திய இலங்கை தமிழர்களிடம் பேச்சுவாத்தை நடத்தினார்.
அப்போது, அவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட சிறிய வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். வழக்கு முடிந்ததும் சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும். அகதிகள் முகாமில் பதிவு செய்துள்ளவர்களை அகதிகள் முகாமில் குடும்பத்துடன் தங்கி வழக்குகளை எதிர்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதற்கு, இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது, கலெக்டர் பிரதீப்குமார், மாநகர துணை போலீஸ்கமிஷனர் ஸ்ரீதேவி ஆகியோர் உடன் இருந்தனர்.