அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான 'நீட்' தேர்வில், அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றால் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எளிதாக மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து விடும். எனவே அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில் அரசு சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளை ஒருங்கிணைத்து, அரசு பள்ளிகளை தேர்வு செய்து பயிற்சி மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 16 அரசு பள்ளிகளில் அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் மருத்துவம் படிக்க விருப்பமுள்ள பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 650 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மேலும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் பயிற்சி வகுப்பு நடக்கிறது. அதில் விலங்கியல், உயிரியியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பாடங்கள் தொடர்பாக விவாதித்தல், மாதிரி தேர்வு ஆகியவையும் நடத்தப்படுகிறது. இதில் திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி மையம் செயல்படுகிறது. அங்கு நேற்று நடந்த பயிற்சியில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.