கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளிகளை சேர்ந்த 235 பேர் தேர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளிகளை சேர்ந்த 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
235 பேர் தேர்ச்சி
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு (நீட்) முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு பள்ளிகளை சேர்ந்த 106 பள்ளிகளில் இருந்து 481 மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பம் செய்திருந்தனர்.இவர்களில் தேர்ச்சி மதிப்பெண்ணான 107-க்கு மேல் 235 மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர்.
இவர்களில் 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அஞ்செட்டி பள்ளி முதலிடம்
குறிப்பாக அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் மாதவன் 720-க்கு 536 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். காளிங்கவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கல்பனா 462 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மிட்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விழிவர்மா 442 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும், நெடுங்கல் அரசு பள்ளி மாணவர் சபரி 425 மதிப்பெண்கள் பெற்று 4-ம் இடமும் பிடித்துள்ளனர்.