'நீட் மசோதா'; கவர்னர் கூறுவது வேடிக்கையாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், கவர்னர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
தென்காசி,
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்காசியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்னும் மருத்துவக் கல்லூரி வராமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம். மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் தான் மாவட்ட மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு காலதாமதம் ஆகி வருகிறது.
நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், கவர்னர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கும், கவர்னருக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை. அரசின் நலத்திட்டங்களை அரசோடு இணைந்து மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய கவர்னர் அரசியல் செய்வதுபோல் எதிராக செயல்படுவது உள்நோக்கம் பொருந்தியதாகவே இருக்கிறது" என்றார்.