உடன்குடி அருகேகாலிகுடங்களுடன் கிராம மக்கள்தர்ணா போராட்டம்


உடன்குடி அருகேகாலிகுடங்களுடன் கிராம மக்கள்தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகே குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு காணப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செம்மறிகுளம் ஊராட்சி ராமசுப்ரமணியபுரத்தில் 10 நாட்களுக்கும் மேலாக தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இங்குள்ள அடி பம்பும் பழுதாகி நீண்டநாட்களாக மராமத்து செய்யப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் முறையிட்டும் அடிபம்பையும் மராமத்து செய்து குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நீடித்து வந்ததால் பொதும்மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களை சாலையில் குவித்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களுடன் இந்து அன்னையர் முன்னணியினருடம் போராட்டத்தில் பங்கேற்று குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணக்கோரி யூனியன் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

லாரியில் வினியோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த உடன்குடி யூனியன் மற்றும் செம்மறிகுளம் ஊராட்சி அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குழாயில் குடிநீர் வினியோகத்துக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அதிகாரிகள், லாரிகள் மூலம் வீடுகளுக்கு தலா 2 குடம் மூலம் குடிநீர் வினியோகம் செய்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இப்பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story