தூத்துக்குடி அருகே நகை கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் மனைவி கைது; 29 பவுன் மீட்பு
தூத்துக்குடி அருகே நகை கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் மனைவி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 29 பவுன் மீட்கப்பட்டது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே மாமியாரிடம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான பெண்ணின் சகோதரியான போலீஸ்காரரின் மனைவி நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 29 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
நகைகள் கொள்ளை
தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை, அன்னை தெரசா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ் என்ற குட்டி (வயது 62). இவர் ஸ்பிக்நகர் பஜாரில் பேன்சி கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி செல்வராணி (55). இவர்களது மகன் தங்கதுரையும் (38), அவரது மனைவி அஸ்வினியும் (35) வேலை நிமித்தமாக சென்னையில் வசித்து வருகின்றனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் அஸ்வினியை அழைத்துக் கொண்டு தங்கதுரை முத்தையாபுரம் வீட்டிற்கு வந்தார்.
சம்பவத்தன்று அற்புதராஜ் பேன்சி கடைக்கு சென்ற நேரத்தில் செல்வராணி, மருமகள் அஸ்வினி, பேரன் அஸ்வந்த் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது பர்தா அணிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீஸ்காரர் மனைவி கைது
அதன்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுப்படி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், மாமியார் நகைகளை மருமகள் அஸ்வினி தனது சகோதரியுடன் சேர்த்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அஸ்வினியை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிச்சென்ற அவரது மூத்த சகோதரியான காஞ்சீபுரம் மாவட்டம் மணப்பாக்கம் குன்றத்தூரை சேர்ந்த கோதண்டராமன் மனைவி சுசீலாவை தேடி வந்தனர். கோதண்டராமன் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் போலீசார் தனது மனைவியை தேடுவதை அறிந்த அவர், நேற்று முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் சுசிலாவை ஒப்படைத்தார். சுசீலாவிடம் இருந்து 29 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.