தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் அருகே நடைமேடை மேம்பாலம் :அமைச்சர் ஆய்வு


தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் அருகே நடைமேடை மேம்பாலம் :அமைச்சர்  ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 3:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் அருகே நடைமேடை மேம்பாலம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளதா? என்பது குறித்து அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

பள்ளிக்குழந்தைகள்

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்துக்கு வடக்கு பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் முன்பு இருந்த மேலூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது இரட்டை ரெயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மேலூர் ரெயில் நிலையம் புதிய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தண்டவாளத்தின் பக்கவாட்டில் சுவர்களும் கட்டப்பட்டு உள்ளன. ஆகையால் நந்தகோபாலபுரம், செல்வநாயகபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் நீண்ட தூரம் நடந்து சென்று பள்ளிக்கூடத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நடைமேடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

ஆய்வு

இதனை தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று நடைமேடை மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை ரெயில்வே கோட்ட பொறியாளர் முத்துக்குமாருடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது மேம்பாலம் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் திட்ட அறிக்கை தயாரித்து மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் பிரமநாயகம் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story