புஞ்சைபுளியம்பட்டி அருகே அய்யா சாமி கோவிலில் வினோத வழிபாடு


புஞ்சைபுளியம்பட்டி அருகே அய்யா சாமி கோவிலில் வினோத வழிபாடு
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே அய்யா சாமி கோவிலில் உருவ பொம்மைகளை பக்தர்கள் உடைத்து வினோத வழிபாடு நடத்தினார்கள்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே அய்யா சாமி கோவிலில் உருவ பொம்மைகளை பக்தர்கள் உடைத்து வினோத வழிபாடு நடத்தினார்கள்.

விஷ ஜந்துகள்

புஞ்சைபுளியம்பட்டி காவிலிபாளையம் அருகே அலங்காரிபாளையத்தில் பழமை வாய்ந்த அய்யாசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம்.

இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடக்கும் விழாவில், இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் களிமண் உருவ சிலைகளை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மாதத்தின் 3 மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் இக்கோவிலுக்கு வருவார்கள்.

உருவபொம்மைகளை உடைத்து வழிபாடு

அதன்படி 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலங்காரிபாளையத்தில் குவிந்தனர். பின்னர் அவர்கள் அய்யா சாமி கோவில் வளாகத்தில் ரூ.10-க்கு விற்கப்பட்ட பாம்பு, தேள், பூரான், பல்லி மற்றும் சிலந்தி போன்ற விஷ ஜந்துகளின் மண் உருவபொம்மைகளை வாங்கி அய்யன், கருப்பராயன், தன்னாசியப்பன் மற்றும் பாம்பாட்டி தெய்வங்கள் முன் வைத்து வழிபட்டனர்.

அதன்பின்னர் கோவில் தெற்குபுற சுவர் ஓரத்தில் கற்பூரமேற்றி விஷ ஜந்துக்களின் உருவ பொம்மைகளை நடுகல்லில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இவ்வாறு வழிபட்டால் வீடு மற்றும் தோட்டப்பகுதிகளில் விஷ ஜந்துக்கள் தென்படாது என்பதும், மனிதர்களை விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பதும் ஐதீகமாக கருதப்படுகிறது. மேலும் இக்கோவிலில் சாம்பல் விபூதியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ஈரோடு, கோவை, திருப்பூர், கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், சேவூர், நம்பியூர், அவினாசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மண்பானைகளை அதிக அளவில் வாங்கி சென்றதால், மண்பானைகள் விற்பனையும் ஜோராக நடைபெற்றது. திருவிழாவையொட்டி சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி மற்றும் நம்பியூர் பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Related Tags :
Next Story