திட்டக்குடி அருகே லாரி டிரைவர்கள் சாலை மறியல்
திட்டக்குடி அருகே லாரி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநத்தம்,
அரியலூர் மாவட்டம் சிலுப்பனூரில் கடந்த 4 நாட்களாக அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரிக்கு மணல் ஏற்ற வரும் லாரிகளை நிறுத்துவதற்காக திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி அருகே உள்ள கொடிக்களம் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த குவாரியில் குறிப்பிட்ட சில லாரி டிரைவர்களுக்கு மட்டும் மணல் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மற்ற லாரி டிரைவர்கள் கடந்த கடந்த 2 நாட்களாக அங்கேயே காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது.
இதன்காரணமாக ஆத்திரமடைந்த மற்ற லாரி டிரைவர்கள் நேற்று முன்தினம் கொடிக்களம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாரபட்சமின்றி அனைத்து லாரிகளுக்கும் மணல் கொடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற டிரைவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.