பெருந்துறை அருகேடாஸ்மாக் மேலாளர் வீட்டில் 37 பவுன் நகை, ரூ.4 லட்சம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெருந்துறை அருகே டாஸ்மாக் மேலாளர் வீட்டில் 37 பவுன் நகை, ரூ.4 லட்சம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
டாஸ்மாக் மேலாளர்
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சேரன் நகரை சேர்ந்தவர் பசுபதி. இவருடைய மனைவி மைதிலி. தர்மபுரியில் டாஸ்மாக் மேலாளராக பசுபதி வேலை பார்த்து வருகிறார். மைதிலி அத்திக்கடவு-அவினாசி திட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அனைவரும் வெளியூர் சென்று விட்டனர். நேற்று காலை மைதிலி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
37 பவுன் நகை
பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 37 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையையும், பணத்தையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி மைதிலி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
வலைவீச்சு
மேலும் ஈரோட்டில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தார்கள். மோப்பநாயும் அழைத்து வரப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.