ஓட்டப்பிடாரம் அருகே மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்


ஓட்டப்பிடாரம் அருகே மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 10:21 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து நேற்று மாணவ, மாணவியரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மறுத்து நேற்று பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை ஆசிரியர் இடமாற்றம்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பெரியநத்தம் கிராமத்தில் தூ.நா.தி.தொடக்கப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கூடத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த சாமுவேல் துரை, மேலசெய்தலை பள்ளிக்கும், ஆசிரியை அருள்மணிசெல்வி வடக்குஆவாரங்காடு பள்ளிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோர்கள் போராட்டம்

இந்த இருவரின் பணியிட மாற்றத்தை கண்டித்தும், உடனடியாக இருவரின் இடமாற்ற உத்தரவை ரத்த செய்ய வலியுறுத்தியும் மாணவ, மாணவியரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மறுத்து நேற்று பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் திருமணி ஸ்டாலின் தலைமையில் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மகாலட்சுமி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் கிராமத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து நேற்று பள்ளிக்கூடத்துக்கு மாணவ, மாணவிகள் செல்லவில்லை.

போராட்டம் தொடரும்

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், நல்லமுறையில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆகிய இருவரின் பணியிட மாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் நாளை(இன்று) முதல் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம், என்று பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்தனர். இதற்கிடையில் புதிதாக இடமாற்றலாகி வந்த ஆசிரியர் மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் எங்களுக்கு தலைமை ஆசிரியர் சாமுவேல்துரை, ஆசிரியை அருள்மணி ெசல்வி பள்ளியில் இருந்தால் மட்டுமே வருவோம் என்று கூறியவாறு கண்ணீர் விட்டு அழத் தொடங்கினர். இதை தொடர்ந்து அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

மீண்டும் இன்று பேச்சுவார்த்தை

இன்று(புதன்கிழமை) மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே கடந்த ஆண்டும் இதே போன்று ஆசிரியர் மாற்றத்தை கண்டித்து இப்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இரண்டாவது முறையாக இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story