மூங்கில்துறைப்பட்டு அருகே வாலிபரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பு


மூங்கில்துறைப்பட்டு அருகே  வாலிபரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை  கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Oct 2022 12:15 AM IST (Updated: 13 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் அஜித் (வயது 26). டிப்ளமோ முடித்திருந்த இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வீட்டில் இருந்தவாறு வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவ்காந்தி(34) குடும்பத்தினர் நடத்திய ஏலச்சீட்டில் அஜித் குடும்பத்தினர் பணம் கட்டி வந்தனர். இதில் ஏலச்சீட்டு பணம் ரூ.35 ஆயிரத்தை அஜித் குடும்பத்தினரிடம் கொடுக்காமல் சஞ்சீவ்காந்தி குடும்பத்தினர் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் கண்டியங்குப்பத்தை சேர்ந்த குப்புசாமி மகன் மணிகண்டன் (32) வாங்கிய ரூ.25 ஆயிரத்தையும் அவர்கள் அஜித் குடும்பத்தினரிடம் கொடுக்கவில்லை.

கத்தியால் குத்திக்கொலை

இதுகுறித்து பலமுறை கேட்டும் அவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த 7.4.2021 அன்று சஞ்சீவ்காந்தியும், மணிகண்டனும் அஜித்தை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருளம்பாடி-மேல்சிறுவலூர் சாலையின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பின்புற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருவரும் சேர்ந்து அஜித்தை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவ்காந்தி, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி கீதாராணி, குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ்காந்தி, மணிகண்டன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2½ ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து சஞ்சீவ்காந்தி, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜவேல் ஆஜரானார்,


Next Story