மயிலாடும்பாறை அருகேகண்மாயில் மண் அள்ளும் கும்பல்
மயிலாடும்பாறை அருகே கண்மாயில் மண் அள்ளும் கும்பலை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடும்பாறை அருகே கடமான் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 7 நாட்கள் மட்டும் அரசு அனுமதி பெற்று விவசாய பயன்பாட்டிற்காக கரம்பை மண் அள்ளப்பட்டது. இதனால் கண்மாயில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம கும்பல் இரவு நேரங்களில் கண்மாயில் ஆங்காங்கே மண்ணை குவித்து வைத்து அள்ளி செல்கின்றனர்.
தொடர்ந்து மண் அள்ளுவதால் நீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் இரவு நேரத்தில் கண்மாய் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி மண் அள்ளுவதை தடுக்க வேண்டும். மேலும் மழைக்காலம் தொடங்கியதால் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நீர் தேங்குவதற்கு வசதியாக மணல் அள்ளுவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உரிய முறையில் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.