கோட்டூர் அருகே, காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
கோட்டூர் அருகே, காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
கோட்டூர்
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி கோட்டூர் அருகே காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் பிரச்சினை
கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் ஊராட்சியை சேர்ந்த கீழத்தெரு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தனர். ஆனாலும் குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அரவிந்த் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். ஆனாலும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 11 மணியளவில் விக்கிரபாண்டியம் கடைவீதியில் மன்னார்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது விக்கிரபாண்டியம் ஊராட்சி கீழத்தெரு கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஒன்றியக்குழு உறுப்பினர் அர்விந்த் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்த கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.