கோபி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கோபி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடத்தூர்
கோபி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மகாமாரியம்மன் கோவில்
கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 135 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மகாமாரியம்மன் கோவிலை கட்டி வழிபட்டு வந்தனர்.
இந்தநிலையில் ஈரோட்டில் இருந்து கோபி வழியாக மேட்டுப்பாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக மகாமாரியம்மன் கோவில் இடித்து அகற்றப்பட உள்ளது.
கோவிலுக்கு இழப்பீடாக நெடுஞ்சாலைத்துறையினர் ரூ.24 லட்சம் வழங்க முன்வந்தனர். இந்த தொகை கோவில் நிர்வாகியிடம் ஒப்படைக்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
கோர்ட்டில் வழக்கு
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர், அந்த கோவிலின் பரம்பரை அறங்காவலர் என்றும் இழப்பீடு தொகையை தன்னிடம் தான் வழங்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் கூறி உள்ளார்.
மேலும் இதற்காக நீதிமன்ற ஆணையையும் பெற்று நெடுஞ்சாலைத்துறையினரிடம் கொடுத்துள்ளார். இதை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனால் நெடுஞ்சாலைத்துறையினரிடம் இருந்து இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை மறியல்
இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு, சாமி சிலைகள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அகற்றப்படும் சாமி சிலைகள் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைக்க உள்ளதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்று திரண்டு, கோவில் முன்பு செல்லும் கோபி-சத்தி ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் மற்றும் தாசில்தார் உத்திரசாமி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் தரப்பில் சாமி சிலைகள் தனியார் இடத்தில் வைக்கப்படாது. பெருந்துறையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு அறையில்தான் வைக்கப்படும் என்றனர்.
அதனை ஏற்றுக்ெகாண்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.