ஈரோடு அருகேரெயிலில் அடிபட்டு புள்ளி மான் சாவு
ஈரோடு அருகே ரெயிலில் அடிபட்டு புள்ளி மான் இறந்தது. அந்த மான் எப்படி வந்தது? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அருகே ரெயிலில் அடிபட்டு புள்ளி மான் இறந்தது. அந்த மான் எப்படி வந்தது? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மான் சாவு
ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், காவிரி ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் மான் ஒன்று செத்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று காலை தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த மான் ஈரோடு வனவர் ரமேசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு நகருக்கு அருகில் வனப்பகுதி இல்லாத நிலையில், தண்டவாள பகுதியில் மான் செத்து கிடந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எப்படி வந்தது?
இதுகுறித்து வனவர் ரமேஷ் கூறியதாவது:-
ரெயிலில் அடிபட்டு இறந்தது பெண் புள்ளி மான் ஆகும். இந்த மானுக்கு சுமார் 2 வயது இருக்கும். மானின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படும். ஈரோடு அருகில் அறச்சலூர், சென்னிமலை, வாய்ப்பாடி ஆகிய பகுதிகளில் தான் வனப்பகுதி உள்ளது. இங்கு மான்கள் அதிகமாக வசித்து வருகின்றன. இங்கிருந்து நேற்று இரவில் இந்த மான் வெளியேறி வழித்தவறி இங்கு வந்திருக்கலாம். அப்போது ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம்.
அதே நேரத்தில் அறச்சலூர், சென்னிமலை, வாய்ப்பாடி ஆகிய பகுதிகளில் காடுகள் உள்ளன. இங்கு ஏதேனும் ஒரு இடத்தில் இந்த மான் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு, இறந்த நிலையில் உடல் ரெயிலில் சிக்கி இழுத்து வரப்பட்டு இங்கு வந்தபோது கீழே விழுந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.