போடி அருகேபோதை மருந்து விற்ற 3 பேர் கைது
போடி அருகே போதை மருந்து விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போதை மருந்து விற்பனை
தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை பகுதியில் போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போடி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மயானம் அருகே 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 3 பேரும் போலீசாரை கண்டதும் ஓட முயன்றனர்.
அதற்குள் போலீசார் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் தடை செய்யப்பட்ட போதை மருந்து பாட்டில் மற்றும் 3 ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிலமலை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுஜித் குமார் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த தங்க தமிழ்வாசன் (23), போடி குலாளர்பாளையத்தை சேர்ந்த திவின்குமார் (23) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை மருந்து மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் அவர்களிடம் மேல்விசாரணை நடத்தியதில், தடை செய்யப்பட்ட இந்த போதை மருந்தை சிலமலை கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்பவரிடம் இருந்து மொத்தமாக வாங்கியுள்ளனர். பின்னர் 3 பேரும் சோ்ந்து மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததுடன், அதற்கான பணத்தை சமமாக பிரித்து கொண்டனர். மருந்து விற்பனை செய்ததில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் உள்பட 3 பேரையும் போலீசார் தேடி சென்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.