நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி


நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் “யார் போட்டியிடுவது என்பது குறித்து பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும்” என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருநெல்வேலி

பா.ஜனதா சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. போட்டியிட்டது. தற்போது அந்த தொகுதி இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பது குறித்து பா.ஜ.க. தலைமை பேசி முடிவு செய்யும். அங்கு ஏற்கனவே 8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தற்போது நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் வரும்போது இணைந்து செயல்படுவோம்.

கவர்னர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறார். 'நீட்' தேர்வு விவகாரத்தில் ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. எனவே இதை அரசியல் ஆக்க வேண்டும் என்று திரும்ப, திரும்ப தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தால், அதற்கு கவர்னர் பொறுப்பாக மாட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் பணியை பா.ஜனதா தொடங்கி விட்டது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை யார் எப்படி பேசினாலும், அவர்கள் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால்தான் அ.தி.மு.க.வுக்கு பலம். கருத்து வேறுபாட்டோடு தேர்தலில் போட்டியிட்டால் பலவீனம் ஏற்படும். அ.தி.மு.க.வை பா.ஜனதா பலவீனப்படுத்தவில்லை. அப்படி இருந்தால் ஏன் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க வேண்டும்?. பா.ஜனதா ஆதரவோடு அவர் முதல்-அமைச்சர் ஆனார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் வரும்போது கட்சி தலைமை அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

* முன்னதாக, தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர். இதில் மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர் சங்கரகுமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், தலைமை ஆசிரியை சங்கரேசுவரி மற்றும் ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story