'அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்'- நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி


அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்-  நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி
x

‘அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்’- நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி

திருநெல்வேலி

நெல்லை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ராமையன்பட்டி மற்றும் அரசு புது காலனி பகுதியில் ரூ.16 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மானூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கான அனுமதி வழங்கி கல்லூரியும் திறந்து வைத்துள்ளார். அடுத்த ஆண்டு சுத்தமல்லி பகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க.வில் இருதரப்பினருக்கான சண்டை நடந்து வந்ததால் தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன். அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பா.ஜனதா கட்சியின் நிலைப்பாடு. அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகே சட்டம்- ஒழுங்கு பிரச்சினை நடக்காமல் தி.மு.க. அரசு தடுத்திருக்க வேண்டும். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கும் அளவிற்கு தி.மு.க. அரசு சென்றிருக்கக் கூடாது. தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சியாகவே பா.ஜனதா கட்சி உள்ளது. எதிர்ப்பை தெரிவிப்பதற்கு எண்ணிக்கை தேவை இல்லை. ஒருவர் எதிர்ப்பு இருந்தாலும் எதிர்ப்பு எதிர்ப்பு தான்.

அ.தி.மு.க. வலுவாக இருக்க வேண்டுமென்றால் இணைந்த கைகளாக இருந்தால் நன்றாக இருக்கும். அ.தி.மு.க. தலைமைக்கு யார் வந்தாலும் அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, ராமையன்பட்டி பஞ்சாயத்து தலைவர் டேவிட் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story