நயன்-விக்கி குழந்தை விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - அமைச்சர் விளக்கம்
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதில் நடிகை நயன்தாரா அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மதுரை,
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் தாம்பத்ய வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை எடுத்து இருந்தார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பதே அது. அதன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த தகவலை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
நயன்-விக்கி தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை பல்வேறு கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. சட்ட நிபுணர்கள் இதுவரை தெரிவித்த கருத்துக்கள் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ளன.
மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நயன் -விக்கி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியின் இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நயன் - விக்கி வாடகைத் தாய் தாய் மூலம் குழந்தை விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. விவரமான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை பெற்ற உடன் அதில் விதிமீறல் இருக்கிறதா?.. முரண்பாடு இருக்கிறதா? என்பதை கண்டறிந்து அதற்கேற்ற நடவடிக்கை சட்டப்பூர்வமாக எடுக்கப்படும் என்று கூறினார்.